கட்டு கட்டு கீரைக்கட்டு! உலக கீரை தினம் இன்று!

உடலும் உணவும்  Published on: 26 மார் 2022, 7:03 pm Edited on: 23 ஏப் 2022, 4:44 pm

கீரைக்கென்று ஒரு தினம்!. சமையலில் இப்போதெல்லாம் கீரையின் குறைபாடு குறைந்து கொண்டே வருகிறது. எல்லாம் நவீனமாக மாறிவிட்டதால் உணவும், உணவு பழக்கவழக்கங்களும் நவீனமாக மாறிவிட்டன. இப்போதெல்லாம் காய்கறிகளையே உணவில் சேர்த்துக் கொள்வது கிடையாது. இனி, எங்கு கீரைக்கு செல்வது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 26 அன்று, தேசிய கீரை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த பச்சை நிறக்கீரை இலை பச்சை காய்கறிகளில் நிரம்பிய ஆரோக்கிய நன்மைகளை நினைவூட்டுவதால் இந்த தினம் கொண்டாப்படுகிறது. கீரை முதலில் பெர்சியாவில் தோன்றியது. அரேபிய வணிகர்கள் கீரையை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். பின்பு சீனாவில் அறிமுகப்படுத்தினர். சீனாவில் கீரை “பாரசீக காய்கறி” என்று அழைக்கப்பட்டது.

கீரை சமைத்தால் யாரும் சாப்பிட மாட்டார்கள் என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் இருந்து வருகிறது. முதலில் நாம் கீரையை சமைப்பதே கிடையாது. சமைத்தால் தானே சாப்பிடுவார்கள். அப்படியே சமைத்தாலும் கீரையின் பெரும்பாலான பகுதி வீணாக தான் போகும். ஆகவே, நம் சமயலறையில் கீரையை கட்டாய உணவாக மாற்ற வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை கீரையை சமைத்து உண்டாலே போதுமானது.

keerai day

பெரியவர்களே கீரை சாப்பிடவில்லை என்றால் குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது? குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம், பச்சை நிறத்தில் கருவேப்பிலை இருந்தால் கூட அதை வீசி எரிந்து விடுவார்கள். சாப்பிட குழந்தைகளுக்கு உணவை எப்படி அலங்கரித்து ருசியாக கொடுக்கின்றோமோ, அந்த அளவிற்கு குழந்தைகள் உணவை விரும்பி உண்பார்கள். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? சமைக்க சோம்பல் பட்டுக்கொண்டு கடைகளில் ஐஸ்கிரீம் போன்றவற்றை வாங்கிக் கொடுத்தே பழகிவிடுகிறோம். அதை பழக்கம் கண்ட குழந்தைகளுக்கு கீரை போன்ற உணவுகளை கண்டாலே பிடிப்பது கிடையாது. எனவே, குழந்தைகள் சாப்பிடும் வண்ணம் கீரைகளை ரொட்டிகள், சாண்ட்விச்கள்  போன்று செய்து கொடுத்தால் உண்பார்கள்.

சமைப்பது என்றால் கீரையை வதக்கி தான் சாப்பிட வேண்டுமென்பதல்ல, மசித்து, கடைந்து, காரக்குழம்பில் போட்டு, சூப்பாக வைத்து, அநுதினமும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாம்பாரில் கலந்து குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் சாப்பிட வைக்கலாம். ஆனால், சமைத்த கீரையை ஃப்ரிஜ்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது. ஏனென்றால், கீரை நச்சு தன்மை கொண்டதாக மாறிவிடும். குழந்தைகளுக்கு 6 மாதம் முதலே கீரையை மசித்து கொடுக்கலாம்.

இல்லத்தரசிகள் கீரை சமைக்காததற்கு முதல் காரணமே, அதனை சுத்தம் செய்யவேண்டும் என்பதால் தான். இந்த தலைமுறையே கீரையை சாப்பிட, சமைக்கத் தவறினால் இனி வரும் தலைமுறையினருக்கு கீரையை பற்றி தெரியாமலே போய்விடும்.

காய்கறிகளுக்கு நிகரான சத்துக்கள் கீரைகளில் இருப்பது யாருக்கும் தெரிவது இல்லை.

கீரை என்றாலே நமக்கு தெரிந்ததெல்லாம் ஒன்று, இரண்டு கீரை வகைதான். அதையே வழக்கமாக சாப்பிட்டு இருப்போம்.

keerai day

அந்த வகையில் முதலில் நினைவுக்கு வருவது மற்றும் சுலபமாக கிடைப்பது என்றால், முருங்கைக் கீரை தான். சிறு வயதில் கிராமங்களில் பாட்டிக்கள் முருங்கைக்கீரையில் கேழ்வரகு மாவைக் கலந்து சிறிது வெள்ளம், தேங்காய்த் துருவல் போட்டு ரொட்டி(பிஸ்கட்) என்று தோசைக்கல்லில் போட்டுக்கொடுப்பதை பார்த்திருப்போம். அதில் இரும்புச்சத்து இருப்பதாக கூறுவர்.

keerai day

இந்த வரிசையில் அடுத்ததாக வரும் கீரை என்றால், அது அரைக்கீரை தான். அரைக்கீரையை அனைவரும் சாப்பிட்டு இருப்போம். இந்த கீரையை பருப்புடன் சேர்த்து நெய் கலந்து கடைந்து உண்ணுவர். இக்கீரை குளிர்ச்சியை நீக்கக்கூடியது. இதனால் தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும். மேலும், இது மலசிக்கல் மற்றும் வைட்டமின் குறைபாட்டால் வரும் நோயை கட்டுப்படுத்தும்.

keerai day

அடுத்ததாக பாலக் கீரை, இந்த பாலக் கீரையைப் போல் உடலுக்கு நன்மை தரும் கீரை வேறு எதுவுமில்லை.  இதில் இரும்புச்சத்து, பீட்டா கரோடின், கால்சியம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை, இரத்தத்தின் ஹீமோகுளோபின் அதிகமாக உதவுகிறது. இந்தக் கீரையின் சாறை எடுத்து கோதுமை மாவுடன் சேர்த்து பிசைந்து பூரி, சப்பாத்தியாக சமைக்கலாம். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

முளைக்கீரை, அகத்திக்கீரை, புளிச்ச கீரை, சிறு கீரை, வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, பசலைக்கீரை, குப்பைக்கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை, புதினாக்கீரை, கொத்தமல்லிக்கீரை, சுக்காங்கீரை, முடக்கத்தான்க்கீரை, முள்ளங்கி இலைக்கீரை, தூதுவளைக்கீரை, மஞ்சள் கரிசலை, பிண்ணாக்குக் கீரை, பரட்டைக்கீரை, கீழாநெல்லி, நஞ்சுமுண்டான் கீரை, தும்பைக்கீரை, மணலிக்கீரை, சக்கரவர்த்திக்கீரை, தவசுக்கீரை, சாணக்கீரை, விழுதிக்கீரை, கொடி காசினிக்கீரை, துயிளிக்கீரை, ஓமவல்லி, துத்திக்கீரை, வதநாராயணன், காரக்கொட்டிக்கீரை, மூக்குதட்டைக் கீரை, நறுதாளி கீரை, பொடுதலை இலைக்கீரை, பண்ணைக்கீரை என்று கீரைகளின் பட்டியல் இன்னும் நிறைய உள்ளது.

keerai day

குழந்தைகளை இந்த கீரைகளை எல்லாம் உண்ண வைக்க ஒரு டிப்ஸ் கொடுக்கிறேன். கீரையை அப்படியே சமைத்து வைத்தால் நமக்கே சாப்பிட தோணாது. எனவே, குழந்தைகளுக்கு பூரி, ரொட்டி, சூப், மிட்டாய்கள் போன்றும், கீரை சாப்பிட்டால் முடி வளரும், அழகாக ஆகலாம், பருக்கள் வராது என்றும் கூறி சாப்பிட வைக்கலாம்.

கீரை தினமாகிய இன்று நம் சமையலில் தினம் ஒரு கீரை என்ற மந்திரத்தைச் சொல்லி சத்துக்கள் மிகுந்த குடும்பமாக நம் குடும்பங்களை வளர்ப்போம்.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special