பல நாள் கனவு பலித்தது; ஜெகன் அமைச்சரவையில் ரோஜாவுக்கு இடம்!

லேட்டஸ்ட்  Published on: 12 ஏப் 2022, 11:23 am Edited on: 17 ஏப் 2022, 4:56 pm

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி புதிய அமைச்சரவையில், அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ள நிலையில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

90-களில் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா, இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து விட்டு திரைத்துறையில் இருந்து விலகினார்.

ஆந்திர அரசியலில் தீவிரமாக களமிறங்கிய ரோஜா 1999-ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். மேலும், 2004-ஆம் ஆண்டு நகரியிலும், 2009-ஆம் ஆண்டு சந்திரகிரியில் தோல்வியடைந்தார்.

அதன்பின்னர், 2009-ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைந்தார். தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள நகரி தொகுதியில் போட்டியிட்டு 2 முறை எம்எல்ஏ ஆனார்.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 2019- ஆம் ஆண்டில் முதல்வராக பதவி பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர்.

ROJA

ஆனால், இரண்டரை ஆண்டுகள் மட்டுமே இந்த அமைச்சர்கள் பதவி வகிப்பர் என்றும், அதன் பின்னர், புதியவர்களுக்கு மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் வாய்ப்பு வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.

தற்போது, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நெருங்குவதால், புதிய அமைச்சரவையை நியமனம் செய்ய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தீர்மானித்தார். கவுதம் ரெட்டி சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்ததால் மீதமுள்ள 24 அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதங்களை முதல்வர் ஜெகனிடம் சமர்ப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து, 25 அமைச்சர்கள் கொண்ட பட்டியல் ஆளுநருக்கு நேற்று மதியம் அனுப்பி வைக்கப்பட்டது. பழைய அமைச்சர்கள் பட்டியலில் இருந்து 10 பேரும், புதிதாக 15 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

அமராவதியில் உள்ள தலைமைச் செயலகம் அருகேயுள்ள மைதானத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பிஸ்வா பூ‌ஷன் அரிச்சந்திரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஜெகன் மோகன் ரெட்டியின் முதல் அமைச்சரவையிலேயே ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக அவருக்கு ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உட்கட்டமைப்பு பிரிவு தலைவர் என்ற முக்கியப்பதவி கொடுக்கப்பட்டது

ROJA

இந்நிலையில், தற்போது நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா புதிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம், அவர் முதல்முறையாக ஆந்திர அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

ரோஜா அமைச்சரானதை நகரி தொகுதியில் உள்ள அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

ரோஜாவை தவிர குடிவாடா அமர்நாத், புடி முட்யாலா நாயுடு, தாடிசெட்டி ராஜா, ராஜண்ணா டோரா பீடிகா, தர்மான பிரசாத் ராவ், ஜோகி ரமேஷ், அம்பத்தி ராம்பாபு, மெருகு நாகார்ஜுனா, விடடாலா ரஜினி, கொட்டு சத்யநாராயணா, குருமுரி வெங்கட நாகேஸ்வர ராவ், காகனி கோவர்த்தன ரெட்டி மற்றும் உஷா ஸ்ரீ சரண் ஆகிய 13 பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.

Also Read: பாஜக மதத்தை வைத்து வெறுப்பை பரப்புகிறது – சிவசேனா தலைவர் சரமாரி தாக்கு!

பழைய அமைச்சர்களில் ஆதி மூலபு சுரேஷ், பெத்திரெட்டி ராம சந்திரா ரெட்டி, நாராயணசாமி, பி. சத்யநாராயணா, ஜெயராம், அம்பாட்டி ராம்பாபு, ராஜேந்திரநாத் ரெட்டி, விஸ்வரூப், அப்பல ராஜு, வேணுகோபால கிருஷ்ணா, அம்ஜத் பாஷா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை போலவே 5 பேருக்கு துணை முதல்வர் பொறுப்பும் வழங்கப்படும் எனத் தெரிகிறது. காப்பு, பட்டியலினத்தவர், பழங்குடியினர், முஸ்லிம் சமூகங்களுக்கு துணை முதல்வர் வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special