வட்டி கட்ட முடியாது! கடன் வாங்கிய இலங்கை கைவிரிப்பு!

லேட்டஸ்ட்  Published on: 12 ஏப் 2022, 4:17 pm Edited on: 17 ஏப் 2022, 4:56 pm

பொருளாதார நெருக்கடியானது இலங்கையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெளிநாட்டில் வாங்கிய கடன், வட்டிகளை திருப்பி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இலங்கையில் உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால் அன்றாடம் பொருட்களை வாங்க மற்ற நாடுகளில் கடன் வாங்கும் நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையையும் செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, தற்போது இந்தியாவிடம் பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக கடன் வாங்கியுள்ளது.

Srilanka

கடந்த மாதம், உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க இந்தியாவுடன் 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனாக பெற இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிலையில், ஒப்பந்தப்படி ஜூலை மாதத்திற்குள் இந்தியாவிற்கு வட்டியுடன் கடன் தொகையை செலுத்த வேண்டிய நிலையில், கடன் வரம்பை மேலும் 500 டாலர்கள் அளவுக்கு அதிகரித்து தர வேண்டும் என மீண்டும் பதவியேற்ற நிதியமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தினார்.

தற்போது இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. சீனாவிடம் பெற்ற கடனின் ஒரு பகுதியை ஜூலையில் செலுத்த வேண்டிய நிலையில் சீனா கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்தநிலையில், நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வெளிநாடுகள், வங்கிகள், சர்வதேச நிதியம் உள்ளிட்டவற்றில் மொத்தமாக உள்ள 51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனை தற்போதைய நிலையில் திருப்பிச் செலுத்துவதை நிறுத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மிகவும் அவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அந்நியச் செலாவணியும் தீர்ந்துள்ளது.

Go home Gota Srilanka

எனவே, வெளிநாடுகள் உட்பட இதுவரை வாங்கிய கடன் மற்றும் அதற்கான வட்டியை திருப்பிச் செலுத்தும் சூழல் தற்போது இல்லை. கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். எங்களிடம் போதிய பணம் வரும் வரை இந்த நிலை தொடரும்.

அவ்வாறு செலுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் வட்டியை கூடுதல் மூலதனமாகவோ அல்லது அடுத்த கடனாகவோ கருதி கணக்கில் வைக்கப்படும். தேவை ஏற்பட்டால் இலங்கை ரூபாயில் திருப்பிச் செலுத்துவதற்கான சுதந்திரத்தை நிதியமைச்சகம் தேர்ந்தெடுத்து உள்ளது.

இதனை வெளிநாட்டு அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கையின் நிதி நிலை மேலும் மோசமடைவதைத் தடுக்கும் பொருட்டு அரசு கடைசி முயற்சியாக மட்டுமே இதனை எடுத்துள்ளது.

Also Read: ஆன்லைன் சூதாட்டத்தால் சீரழியும் மக்கள்! தடை போட தடங்கலா?

தெற்காசிய நாட்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் மீட்புத் திட்டத்தை அணுக வேண்டிய சூழல் உள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
இதன் மூலம், அனைத்து கடன் வழங்குபவர்களுக்கும் நியாயமான மற்றும் சமமான முறையில் செயல்படுவதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடனை செலுத்துவது சவாலானது மற்றும் சாத்தியமற்றது என்ற ஒரு கட்டத்திற்கு வந்துள்ளோம். கடனை மறுசீரமைப்பது மற்றும் கடின கடனைத் தவிர்ப்பதுதான் எடுக்கக்கூடிய சிறந்த நடவடிக்கை” என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special