மெல்லிசையே…! தமிழில் தொலைந்த தொல்லிசையே…!

வாழ்வியல்  Published on: 22 மார் 2022, 4:28 pm Edited on: 31 மார் 2022, 3:00 pm

முத்தமிழில் ஒன்று தான் இசை…! பண்ணோடு கலந்தும் தாளத்துடன் கூடியும் பிறப்பது தான் இசை. தமிழில் தொலைந்து போன இசைகளும் ஏராளம், இசைக்கருவிகளும் ஏராளம்.

துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்!

இசைக்கருவிகள் தோன்றிய வரலாறு பெரிதாக ஒன்றும் இல்லை. மூங்கிலில் வண்டுகள் துளைத்து ஓசை உருவாகி புல்லாங்குழலாக மருவியது. பழங்கால மனிதன் வேட்டையாடும் எலும்புகளைக்கொண்டு சத்தமிட்டான் ஓசை வந்தது. இப்படித்தான் இசைகளும் இசைக்கருவிகளும் தோன்றின.

தமிழர்களுடைய அனைத்து இசைக்கருவிகளுமே இனிமையை கொடுக்கக்கூடியவை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலங்களில் இருந்து இசையை உபயோகித்தது மருத்துவத்திற்கு மட்டுமே. பின்பு, வேட்டை, போர் என பயன்பாடு விரிந்தது.

Musical Instruments

இசை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. மனது சரியில்லை என்றால் இசை, உறங்கும் போது இசை என்று தற்போது ஆளுக்கொரு காதுகளில் ஹெட்செட்டுகளை மாட்டிக்கொண்டு சுற்றினாலும், இசைக்கருவிகளை இசைக்கும் போது என்னவோ நமக்கு நாடி, நரம்பிலெல்லாம் ஒரு கிளர்ச்சி ஏற்படும். அதை வெளிபடுத்த நடனம் ஆடுவோம்! ஆர்ப்பரிப்போம்! கூச்சல் போடுவோம்! இது போன்ற செயல்களில் நம்மை அறியாமல் ஈடுபடுத்தி விடும் இந்த இசைக்கருவிகளின் கோஷங்கள்.

அப்படிப்பட்ட  இசையை தந்த இசைக்கருவிகளின் நிலைகள் என்னவென்று நம்மால் நினைத்துப்பார்க்க முடிகிறதா?

தற்போது இசைக்கருவிகளை வைத்து இசையை இசைக்கும் தன்மையை மறந்து டிஜிட்டல் முறை இசையிலேயே மயங்கி கிடக்கின்றோம். தொல்லியல் இசைகளையும், இசைக்கருவிகளையும் காக்க வேண்டியது தமிழர்களாகிய நம் கடமை. மேற்கத்திய இசைகளை நாம் கேட்டாலும், நம் பாரம்பரிய தமிழின் இசையையும், இசைக்கருவிகளையும் பாதுகாத்து நமது பாரம்பரிய இசை முறையை நிலைநாட்ட வேண்டும்.

பழங்கால இசைக்கருவிகள் இன்னும் மறையவில்லை. நமது சென்னையில் பழங்கால இசைக்கருவிகளை சேகரித்து, அதை பாதுகாத்து இசையைக் கற்றுக்கொடுத்து பாரம்பரிய இசைக்கலைஞர்களை உருவாக்க முன்வருகின்றனர், “கோசை நகரான் தமிழர் தொல்லிசையகம் குழுவினர்.

Musical Instruments

தொல்லிசை கழகத்தின் வரலாறு:

தொல்லிசை கழகத்தின் மேலாளர் கோசை நகரான் சிவக்குமார் ஐயாவை சந்தித்து பேசினோம். கோசை நகரான் என்று சென்னையில் உள்ள கோயம்பேட்டை தான் சொல்வார்கள். அருணகிரிநாதர் 500 வருடங்களுக்கு முன்பாக கோயம்பேட்டில் தான் அவருடைய திருப்புகழின் நிறைவான பகுதியை பதிவுசெய்துள்ளார். தான் பிறந்த ஊரான கோயம்பேட்டின் பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காக குழுவுக்கும் கோசை நகரான் என்று பெயர் சூட்டியதாக சிவக்குமார் ஐயா கூறினார்.

இவரின் இந்த பயணம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 1200 குடமுழுக்கிற்கு மேலாக தமிழகம் முழுவதும் பயணம் செய்திருக்கிறார். அதன் விளைவாக கடந்த 12 ஆண்டுகளாக இந்த இசைக்கருவிகளை மீட்டுருவாக்கம் செய்து மக்களிடையே இசைக்கருவிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரும்பணியினை செய்து வருகிறார். அவரிடம் சில வினாக்களை முன் வைத்தோம்

எதற்காக நாம் இந்த பாரம்பரிய இசை கருவிகளை பாதுகாக்க வேண்டும்?:

“இந்த இசைக்கருவிகளை எல்லாம் நாங்கள் ஊரூராய் சென்று, ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான இசைக்கருவிகள் இசைப்பதைப் பார்த்து, அந்த கருவிகளை மீட்டுருவாக்கம் செய்து கண்காட்சியில் வைத்துள்ளோம்.

Musical Instruments

கண்காட்சியில் 120 வகையான இசைக்கருவிகளின் பட்டியல் வைக்கப்படுள்ளது. அந்த பட்டியலிலே வருடத்திற்கு 5 இசைக்கருவிகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டுமென்ற தொலைநோக்கு பார்வையிலே இன்றைக்கு கடந்த 1௦ வருடங்களாக சேமித்து வைத்த மொத்த இசைக்கருவிகளின் எண்ணிக்கை 80 ஆக இருக்கிறது. இன்னும் 40 வகையான கருவிகளை மீட்டுருவாக்கம்  செய்யவேண்டும்.

எந்த கருவிகளையும் நாங்கள் வெளியில் விலை கொடுத்து வாங்குவது இல்லை. நாங்களே தயாரிக்கிறோம். இல்லங்களில் உள்ள தொன்மையான இசைக்கருவிகள் வைத்து இருந்தாலும் பழுது நீக்கிக் கொடுப்பதற்கும், வேறு புதிய கருவிகளை செய்து தருவதற்கும் முன் வருகிறோம். உங்கள் இல்லங்களில் நடக்கும் சுப தினங்கள் டிஜிட்டல் முறையில் நிகழ்வதை விட பழங்கால இசைக்கருவிகளின் ஓசை முழங்கினால் நன்றாக இருக்கும். இதனால் பல நல்ல மருத்துவ குணங்களும் உண்டு. எங்களின் நோக்கம் அனைத்தும் இசைக்கருவிகள் அழிந்து வருவதை தடுக்க வேண்டுமென்பதே” என்று கூறினார்.

தமிழர்கள் இசைக்கருவிகளை தோல்கருவி, துளைக்கருவி, கஞ்சச்கருவி, நரம்புக்கருவி என்று நான்கு வகையாக பிரித்து இருந்தனர்.

தோலினால் போர்த்தப்பட்டு செய்ததை தோல்கருவிகள் என்றும், காற்றினால் இசைக்கக் கூடியதை துளைக்கருவிகள் என்றும், அதிக கனமான கருவிகளை கஞ்சக்கருவிகள் என்றும், நரம்புகளை கொண்டு இசை மீட்டக்கூடியதை நரம்புக்கருவி என்றும் வகைப்படுத்தினர்.

அந்த வகையில் அனைவரும் மிக எளிதாக கற்கக்கூடிய இசைக்கருவி துளைக்கருவி. இதற்கு அடிப்படையாக சங்குநாத பயிற்சி கற்றுத்தரப்படுகிறது. கோசை நகரான் குழு கடந்த 7 வருடங்களாக சென்னை அம்பத்தூர் டன் லப் மைதானத்தில் ஞாயிறுதோறும் 2 மணிநேரம் இலவச பயிற்சி நடத்தி வருகின்றது. பல நாடுகளில் இருந்து வந்து சங்கு நாதத்தை கற்றுக்கொண்டு அந்த நாடுகளில் இந்த நாதத்தை உபயோகித்து வருகின்றனர்.

Musical Instruments

தமிழக அரசுக்கு இந்த குழு வைக்கும் கோரிக்கை:

குழுவிற்கு தமிழக அரசோ, தனிப்பட்ட நபரோ ஒரு இடத்தை  அமைத்துக் கொடுத்தால் போதும். பயிற்சி பட்டறை மற்றும் மற்ற விடையங்களை தாங்களே உருவாக்கிக்கொள்வதாக கோரிக்கை வைத்தனர்.

இசைக் கருவிகளைப் பாதுகாப்பதன் அவசியம் என்ன?

நம்முடைய பண்பாடு எங்கிருந்து தோன்றியது? கலைஞர்கள் செய்கின்ற கலையினுடைய ஒட்டுமொத்த அமைப்பை பண்பாடு என்கின்றோம். எனவே, பண்பாடு வளர வேண்டுமென்றால், கலைகளை வளர்க்க வேண்டும். கலைகளை வளர்க்க கலைஞர்கள் உருவாக வேண்டும். கலைஞர்கள் வளர கருவிகள் உருவாக வேண்டும். எனவே, நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் இந்த இசைக்கருவிகளில் தான் உள்ளது. அதன் விளைவாகத் தோன்றியதே இந்த இசைக்கருவிகளின் அருங்காட்சியகம்.

Musical Instruments

நாம் அறிந்திராத இசைக்கருவிகள் பல இடம்பெற்றுள்ளன. அவை; கர்ணா, நமரி, கொவுரிக்காளம், கோமுகவாத்தியம், எக்காளம், முகவினை, சிறிய பூரிகை, துத்தேறி, பித்தளைக்கொக்கரை, பெரிய பூரிகை, நாகத்தாரை, கிங்கிணி, சங்குநாதம், சிலம்பம், பிரம்மத்தாளம், சேமக்கலம், பம்பை, துடி, பதலை, கடம், உறுமி, தண்ணுமை, பறை, வெண்கல முழவு, துடும்பு, கொட்டுத்தவில், பஞ்சமுகவாத்தியம் (ஐமுகமுழவு), உடுக்கை, தமருகம், தாரை, இசைக்கிண்ணம், நமரி, நாதசுரம், சங்கு, திருச்சின்னம், துத்தேலி, வலம்புரிசங்கு, கோமடிசங்கு போன்றவை.

இந்த இசைக்கருவிகளின் பட்டியலே இப்படி நீண்டு இருக்கும்போது, இதன் இசைகளும் நமக்குள் எவ்வளவு நீண்டு இருக்கும்? இசைக்கருவிகளிலே இவ்வளவு பாரம்பரியத்தை கொண்ட நாம், இரண்டு, மூன்று இசைக்கருவிகள் கொண்ட மேற்கத்திய இசைகளுக்கு அடிமையாகி இருக்கிறோமே என்று உள்ளுணர்வு கேள்விகள் கேட்கிறது.  இன்றைய இளைய சமுதாயத்தின் மீது ஒரு வருத்தம் வருகிறது. அந்த வருத்தமே இந்த தொல்லிசை கோசை நகரான் தோன்றக்காரணமாகவும் அமைந்துள்ளது.

Also read: ஓ…சாயாலி…! விளம்பர இடைவெளியில் ராசி கன்னா-வின் கீயூட் போட்டோஷூட்!

Musical Instruments

எக்காளம்:

போர்க் காலங்களில் எதிரிகள் வரும் தூரங்களை கணிக்கவும், அறியவும், மற்றவர்களுக்கு செய்திகளை தெரிவிக்கவும், ஆங்காங்கே, மண்டபம் அமைத்து எக்காளம் முழங்கி செய்தியை கடத்தினார்கள்.

Musical Instruments

சங்கு:

தமிழர்கள் தனது வாழ்க்கையில் மூன்று வகையான சங்கினை உபயோகப்படுத்தி உள்ளனர். அவை, ‘முதற்சங்கு, இடைச்சங்கு, கடைச்சங்கு’.

இதில், முதற்சங்கு என்பது தாயானவள் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது இசைப்பது; இடைச்சங்கு திருமணத்தில், மணமகன், மணமகளுக்கு தாலி கட்டும் நேரத்தில் ஒலிப்பது; கடைச்சங்கு அனைவருக்கும் தெரியும் உயிர் உடலை விட்டு பிரிந்தபின் உபயோகிப்பது;

அனைவரும் சவ ஊர்வலத்தில் மட்டுமே சங்கு உபயோகிக்கப்படும் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், சவத்திற்காக மட்டும் சங்கு பயன்படுத்தப்படவில்லை. சாகாமல் இருப்பதற்காகவும் சங்கு பயன்படுத்தப்பட்டது. ஆம். உயிர் பிரிகின்ற நேரத்தில் 10 விதமான வாயுக்கள் உடலை விட்டு பிரியும். அந்த வாயுக்கள் காற்றில் கலந்து உயிரோடு இருக்கும் மற்றவர்களை தாக்காமல் இருக்கவும் சங்கு நாதங்கள் இசைக்கப்பட்டன. எனவே, சவத்திற்காக சங்குநாதம் முழங்கப்படவில்லை, சவத்தின் அருகில் உள்ளவர்களின் ஆரோகியத்திற்காக சங்குநாதம் முழங்கப்பட்டது என்பதை அறிந்து கொள்வோம்.

Musical Instruments

கொக்கரை:

63 நாயன்மார்கள் சிவபெருமானைக் கண்டு எழுந்து நிற்கையில், காரைக்கால் அம்மையார் மட்டும் சபையில் அமர்ந்து இருப்பார். சிவபெருமானே ‘அன்னை’ என்று கூறிய ‘காரைக்கால் அம்மையார்’ இறைவனை வழிபடும்போது அவர் கண்ட இசைக்கருவிகளை தன்னுடைய பாடலில் குறிப்பிட்டு இருப்பார். சிவனின் வலதுபுற இடையில் புனல் போன்ற எருதின் கொம்பினால் செய்த இந்த கொக்கரை இருக்குமாம். எருது இறைவனின் வாகனம் என எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட எருதின் கொம்பினால் செய்த இசைக்கருவி தான் இது.

Musical Instruments

கொம்புத்தாரை:

பழங்கால மனிதன் தான் வேட்டையாடிய விலங்குகளின் எலும்புகளில் இருந்து கண்டறிந்த இசைக்கருவி தான் கொம்புத்தாரை. இதன் வடிவத்தை பார்த்தால், விலங்கினுடைய தலை, முதுகு, வால் பகுதி எலும்பினுடைய இணைப்பு போன்று இருக்கும்.

Musical Instruments

பதலை:

புறநானூற்றிலே பதலை என்ற கருவி உபயோகிப்பது பற்றி கூறப்பட்டிருக்கும். இன்று நாம் ‘தபேலா’  என்று அழைக்கும் கருவியே முற்காலத்தில் பதலையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Musical Instruments

முரசு:

முன்பெல்லாம் அனைத்து கோவில்களிலும் முரசு இருந்தது. முரசு இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளும் நடந்தது இல்லை. இன்றைக்கு எந்த நிகழ்ச்சிகளிலும் முரசு இல்லை.

Musical Instruments

ஐமுகமுழவு(பஞ்சமுகவாத்தியம்):

இன்றைய இளைய சமுதாயத்தினர் ட்ரம்ஸ் என்று தற்போது இந்த கருவியை உபயோகித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஐமுகமுழவு தான் பழங்கால ட்ரம்ஸ். ஆனால், தற்போது நெகிழிகளால் ஆன ட்ரம்ஸ்-ஐ உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம். இந்த இசைக்கருவி திருவாரூரில் மட்டுமே காணப்படக்கூடிய கருவி. இன்றைக்கு இந்த கருவிகளை இசைப்பவர்கள் குடும்பமும் இல்லாமல் இருக்கிறது. இந்த இசைக்கருவி 5 விதமான தோல்களால் போர்த்தப்பட்டு, இறைவனின் 5 வித முகங்களையும் குறிக்கிறது.

Musical Instruments

இசைக்கிண்ணம்:

நாம் தற்போது யூ-டியூப்பிலும், இன்ஸ்டாகிராமிலும் மெடிட்டேஷன் செய்வதற்கு என்று தனி  மியூசிக் ஒன்றை கேட்டு வருகிறோம் அல்லவா! அந்த ஓசை இந்த இசைக்கிண்ணத்திலிருந்து தான் பிறக்கிறது.

Musical Instruments

குருவி இசை:

2G, 3G, 4G, 5G போன்ற அலைவரிசைகளை பயன்படுத்தி பறவை இனங்களையே நாம் அழித்து வருகிறோம். பறவைகள் கூட்டாக சேர்ந்து எழுப்பும் சத்தத்தினை கேட்க முடியாத சூழலில் நாம் இருந்து வருகிறோம். இதில் குருவி இனங்களும் அடங்கும். குருவிகளின் ஒலிகள் இசையாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சத்தத்தால் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளவர்கள் விடுபடவும் வாய்ப்புண்டு.

பழங்கால இசைக்கருவிகளின் அளவு இவ்வளவு பெரிதாக உள்ளதே, அப்போது மனிதன் இந்தக் கருவிகளை உபயோகிக்க எந்த உருவத்தில் இருந்து இருப்பான். இராஜராஜ சோழனுடைய போர்ப்படையில் இருக்கக்கூடிய யானையின் உயரம் 3௦ அடி என்று கூறுகிறார்கள். அவரின் வாள் 6 அடி நீளம், யானை 30 அடி என்றால் மனிதன் எப்படி இருந்து இருப்பான். அவனது உணவு பழக்கவழக்கங்கள் எவ்வாறு இருந்து இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அந்த காலங்களில் உள்ள பழக்கவழக்கத்தை கொண்டு வர முடியவில்லை என்றாலும், இந்த காலத்தில் முடிந்த கருவிகளை உபயோகித்துப் பழகுவோம்!

இசைக்கருவிகளை உபயோகிப்பதனால் நமது உடல் ஒரு வித மருத்துவ நலனை பெறும். ஆனால், தற்போது நாம் உபயோகித்துக் கொண்டிருக்கும் நெகிழி இசைக்கருவிகளில் இருந்து வரும் இசையால் எரிச்சல், தலைவலி போன்ற உடல் நலக்கேடுகள் ஏற்பட அதிக வாய்ப்புக்கள்  உள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். ஆனால், நம் பாரம்பரிய கருவிகளை இசைக்கும்போதோ, அதிகப்படியான ஒலி அதிர்வெண்கள் செவியினுள் செல்வதில்லை.

நாம் எவ்வளவு பெரிய பாரம்பரியத்தில் இருக்கிறோம் என்றால் மட்டும் இந்த இசைக்கருவிகள் உயிர் பெற்றுவிடாது. இந்தக் கருவிகளை தமிழர்களாகிய நாம் வருங்காலங்களில் உபயோகிப்பதனால் மட்டுமே இந்த இசைக்கருவிகள் உயிர்பெறும்.

நாம் வலிமையோடு வாழவேண்டுமென்று சொன்னால், இங்குள்ள இசைக்கருவிகள் மீண்டும் புத்துயிர் பெற்று வந்தால், இசையும் வலிமை பெரும், பண்பாடும் வலிமை பெரும், தமிழர்களும் வலிமை பெறுவார்கள்.

பாரம்பரிய தமிழின் இசை நன்மைகளை உணர்ந்து, நாமும் நமக்கு கிடைக்கும் இசைகளையும் இசைக்கருவிகளையும் பாதுகாப்போம்!.

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special