விஞ்ஞான முன்னேற்றமே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்லும்! தேசிய அறிவியல் தினம் இன்று…!

சேதிகேளு  Published on: 28 பிப் 2022, 7:37 pm Edited on: 31 மார் 2022, 3:36 pm

ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகிக் கொண்டு தான் உள்ளன. நாம் தினமும் காலையில் எழுந்து உபயோகிக்கும் பற்பசையில் இருந்து, இருளை விரட்டிய மின்விளக்குகள் மட்டுமின்றி, வேலைகளை செய்யவதற்கு கணினிகள் தொடங்கி மனித உருவத்தில் உள்ள ரோபோக்கள் வரை அனைத்தும் அறிவியல் தான் !!!

இவ்வாறு அறிவியல் பல்வேறு முன்னேற்றங்கள் அடைந்து விட்டன. இருப்பினும் அறிவியலின் பசி அடங்கவில்லை. பசி அடங்கவில்லை என்பதை விட, அறிவியலின் பசியை ஆற்றமுடியவில்லை! இவ்வாறு அறிவியலின் பசி நீடித்துக் கொண்டே தான் உள்ளது.

நம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதியை தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறோம்.

நாம் பல தேசத் தலைவர்களையும் பல தியாகிகளையும் போற்றுவது உண்டு, அதே போல் அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற முக்கிய கருத்தின் அடிப்படையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு குறிக்கோளின் அடிப்படையில் இந்நாள் கொண்டாடப்படும். அதேபோல், இந்த ஆண்டிற்கான கருப்பொருள்;

நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறை”.

national science day

 

அறிவியல் தினம் கொண்டாடுவதின் நோக்கம்:

அறிவியல் மற்றும் அதன் பயன்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதுதான் இதன் முக்கிய நோக்கம். மேலும், இந்திய இயற்பியலாளர் சர் சந்திர சேகர வெங்கட ராமன் கண்டுபிடித்த பொருளால் ஒளி சிதறலின் ஒரு குறிப்பிட்ட நிகழ்வான “ ராமன் விளைவு” கண்டறியப்பட்டது. ராமன் விளைவு கண்டறியப்பட்ட பிப்ரவரி 28-ம் தேதியை தான் நாம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

இந்த தினம் 1987-லிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டறிந்ததால் சர் சி.வி. ராமனுக்கு 1930-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேலும், இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்ததால் 1954-ல் மத்திய அரசு பாரத ரத்னா விருதை வழங்கி சிறப்பித்தது. இந்த உலகளாவிய பெருமையை இந்தியாவிற்கு பெற்றுத் தந்ததின் நினைவாக அறிவியல் என்பது அகில உலகிற்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் இந்திய அரசு இந்த நாளை தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.

national science day

அறிவியல் என்றால் என்ன?

அறிவியல் என்பது தற்போது தோன்றியது அல்ல…ஒரு மனிதன் எப்போது தான் நினைத்ததை, உணர்வதை செய்யத் துவங்கினானோ, அன்றே அறிவியல் பிறந்துவிட்டது. நோய்களை குணப்படுத்துவது, இயற்கையின் மாறுபாடுகளை கண்டறிவது, விண்ணில் உள்ள கோள்களைக் கணக்கிடுவது என காலங்காலமாக நம் முன்னோர்கள் கணித்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.

ஆனால், 17-ம் நூற்றாண்டில் கலிலியோவிற்குப் பின் தோன்றிய தற்கால அறிவியல் தனக்கென்று சில வரைமுறைகளைக் கொண்டிருந்தது.

அவற்றை வைத்துதான் நமது அணுகுமுறை அறிவியல்பூர்வமானதா இல்லையா என கணிக்க முடியும். அறிவியல் என்பது அனுபவப்பூர்வமான, பார்க்கக்கூடிய, கணிக்கக்கூடிய, அளக்கக்கூடிய உலகத்தைப் பற்றி மட்டுமே பேசும். அளவிட முடியாத ஆன்மாவையோ, கடவுளை பற்றியோ பேசாது. அறிவியல் என்பது முறையாகத் திட்டமிட்டு தெளிவாக சொல்வது; சோதனையின் முடிவு ஒன்றாகவே இருக்கும்; இரு வேறுபட்ட பொருளை தராது; அறிவியல் கொள்கைகளையும், விதிகளையும் தேடி அலையக்கூடியது. அதனாலேயே, ஒரு நிகழ்வு நடப்பதற்கான காரணம், அந்த நிகழ்வு மறுபடியும் நடக்குமா? என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் அறிவியல், ஜோதிடம் சொல்லாது. இது நடக்கும், இது நடக்காது என்பதற்கான  வாய்ப்புகள் இவை என்று துல்லியமாக எடுத்துச் சொல்ல முயற்சிக்கும்.

Also read: நிலவில் மோதவுள்ள ராக்கெட் “எங்களுடையது இல்லை” – சீனா அறிவிப்பு

 

நமக்கு தெரியாத இந்திய அறிவியல் அறிஞர்கள்:

நம் இந்திய அறிவியல் அறிஞர்கள் எத்தனை பேரை நமக்குத் தெரியும்!;

“ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்”, “தாமஸ் ஆல்வா எடிசன்” போன்ற அறிவியல் அறிஞர்களை தெரிந்த நமக்கு “ப்ரஃபுல்லா சந்திர ராய்”, “சாலிம் அலி” போன்ற அறிவியல் அறிஞர்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது நம் தவறல்ல. இந்திய வரலாற்றின் தவறே! இந்திய பாடப் புத்தகங்களில் அயல்நாட்டு அறிவியல் அறிஞர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் கொடுத்த இடத்தில் பாதி நம் இந்திய அறிஞர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் கொடுத்திருந்தால் இது போன்ற அறிஞர்களைத் தெரிந்திருக்கும்.

ப்ரஃபுல்லா சந்திர ராய்:

national science day

“ப்ரஃபுல்லா சந்திர ராய்” இவர் தான் இந்தியாவின் முதல் மருந்து நிறுவனத்தின் நிறுவனர் ஆவர். இந்திய வேதியியல் கழகத்தை துவங்கியவர், மற்றும் பிரபல கல்வியாளர், ஆயுர்வேத மருத்துவம் பற்றி பல ஆய்வுகள் மேற்கொண்டவர். மேலும், இவர் தான் பாதரச நைட்ரைடு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தை கண்டு பிடித்தவர்.

சாலிம் அலி:

national science day

“பேர்ட்மேன் ஆஃப் இந்தியா” என்று அழைக்கப்படும் இவர் பறவையியல் எனப்படும் “ஆர்னிதோலஜி – யை உருவாக்க உதவியவர். உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவர். இவர் முதன்முதலில், இந்தியாவில் பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளை துவக்கியவர்.

ஹோமி ஜேஹாங்கிர் பாபா:

national science day

இந்திய அணு சக்தித் திட்டத்தின் சிறந்த தலைமை சிற்பி என அழைக்கப்படும் இவர், கருத்தியல் இயற்பியலாளர் ஆவர். விஞ்ஞான முன்னேற்றமே இந்தியாவை  வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்லும் என்று முழுமூச்சில் ஆய்வுக் களத்தில் இறங்கியவர். இவர் அண்டக்கதிர் பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டவர், இதன் மூலம் மீசான் என்ற அடிப்படை துகளையும் கண்டறிந்தார். மேலும் குவாண்டம் கோட்பாடு உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்.

ஜகதீஷ் சந்திர போஸ்:

national science day

வானொலி மற்றும் நுண்ணலை ஒளியியல் விசாரணையின் முன்னோடியான இவர் இயற்பியல், உயிரியல் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். இவர் மார்கோனிக்கு முன்னரே ரேடியோவில் கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பை கண்டறிந்தார். இருப்பினும் அஃது அறிவியல் உலகினரால் கவனிக்கப்படாமல் போனது. மேலும், மிக குறைந்த அலைநீளமுடைய நுண்ணலைகளை உருவாக்கும் ஓர் இயந்திரத்தை வடிவமைத்தார். மூலக்கூறுகளின் பண்புகளில் மேற்கொண்ட ஆய்வில் புதியதோர் ஒளிப்படக் கோட்பாட்டை உருவாக்கியவர். கணிப்பொறி அறிவியலின் துவக்க ஆராய்ச்சிகளில் இவர் முக்கிய பங்காற்றியவர்.

ராஜ் ரெட்டி:

national science day

இவர் இந்திய மற்றும் அமெரிக்க கணினி விஞ்ஞானி  ஆவர். மேலும், கணினி அறிவியலில் மிக உயர்ந்த விருதான ஏசிஎம் தூரிங்கு விருது வென்ற ஆசிய வம்சாவளியைச் சார்ந்த முதல் நபர். செயற்கை நுண்ணறிவுக்கான அமெரிக்க சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்த இந்தியர்.

 

இதனை போன்றே இன்னும் பல இந்திய அறிவியல் அறிஞர்களை உருவாக்குவோம்! உருவாகுவோம்! அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலமே நிலையான எதிர்காலத்தை அமைக்க முடியும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது அறிவியலே! எந்தவொரு நாகரீகத்திற்கும் அடிப்படை அறிவியலே! அப்படிப்பட்ட அறிவியலின் சிறப்பை நம் இளம் தலைமுறையினருக்கு கற்றுக்கொடுப்பதும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி அதை நடைமுறைக்கு கொண்டு வருவதுமே, இந்நாளின் நோக்கமாகும். எனவே அறிவியலை படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், செயல் வடிவிலும் கொண்டு வர முயற்சிப்போம். இந்த அறிவியல் நாளில் பல்வேறு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டறிந்து அவற்றை நடைமுறைக்கு கொண்டு வந்து நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கு வித்திடுவோம்! என்று உறுதி ஏற்போம்!

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special