உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதா…? உலக தூக்க தினம் இன்று( world sleep day)…!

சேதிகேளு  Published on: 18 மார் 2022, 1:05 pm Edited on: 30 மார் 2022, 6:58 pm

கடவுள் கொடுத்த எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

தூக்கம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. “பொம்பள பிள்ளைக்கு என்ன தூக்கம்” என்ற குரல் பெண்கள் இருக்கும் எல்லா வீட்டையும் தட்டும். பெண்களுக்கு தூக்கத்திற்கான வீடே அம்மா வீடு தான்! ஏன் பெண்கள் மட்டும் தூங்கக் கூடாது! சரி வேறு கதைக்குள் செல்ல வேண்டாம். “தூங்காதே தம்பி தூங்காதே” என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம். தூங்கவே கூடாது என்றா?

அடுத்த வார்த்தையை பார்ப்போம்! “சோம்பேறி என்ற பெயர் வாங்காதே” இது அதிகம் தூங்குபவர்களுக்கு என்று நினைக்கிறேன்.

“நல்ல பொழுதையெல்லாம்

தூங்கி கெடுத்தவர்கள்

நாட்டை கெடுத்ததுடன்

தானும்கெட்டார்”

SLEEP

இதிலிருந்து என்ன தெரிகிறது, வாழ்விற்காக தூங்கலாம், ஆனால், தூக்கத்திற்காக வாழக்கூடாது; புரியவில்லை என்று தெரிகிறது! அதை பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்!

தூக்கம் என்றாலே ஓய்வுதான். நம் உடலிற்கு ஓய்வை அளிப்பதற்காக தான் நாம் தூங்குகிறோம். ஒரு நாள் சரியான தூக்கம் இல்லையென்றால், அந்த நாளே மந்தமாகி விடுகிறது. அந்த காலத்தில் நம் முன்னோர்கள் எல்லோரும் சூரிய உதயத்திற்கு முன் எழும்பி, சூரியன் மறையும் வரை சுறுசுறுப்பாய் இருப்பார்கள் ஆனால், நாம் அப்படியா இருக்கிறோம். ஆனால், நமது கையில் கைபேசியும், இன்டர்நெட்டும் வருவதற்கு முன் நாமும் அப்படி தான் இருந்தோம். அது வந்ததற்கு பிறகு நமது வாழ்க்கை முறையும் மாறிவிட்டது, நமது பழக்கவழக்கங்களும் மாறிவிட்டது. ஆந்தை போல் இரவில் அதிக நேரம் கண் விழித்து இருப்பது, பகலில் நன்றாக உறங்குவது,. கேட்டால் “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது” என்று பிதற்றிக் கொள்வது.

இரவு நேரத்தில் தூங்கும் முன் அருகில் உள்ளவர்களுக்கு இரவு வணக்கம் சொல்வதை விட்டு விட்டு, வாட்சப் ஸ்டேட்டஸ்-இல் இரவு வணக்கம் என்று சொல்லி மற்றவர்களை சாவடிப்பது. அதிகாலை எழுந்ததும் மொபைல் மூஞ்சியில் தான் முழிப்பது இது போன்ற பழக்கவழக்கத்திற்கு நாம் பழகி விட்டோம்.

தூக்கதிற்கு என்று ஒரு நாளா? இதில் என்ன இருக்கிறது…? தினமும் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறோம். அதை பற்றி பேசுவது கூட, முட்டாள் தனமாக தோன்றலாம். இது மனிதர்களின் வாழ்கையில் மிகவும் சாதாரணமாக, குறைத்து மதிப்பிடப்பட்ட அம்சங்களில் ஒன்று தானே! இதில் என்ன கொண்டாட உள்ளது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், தொடர்ச்சியான தூக்கப் பிரச்சினை உள்ளவர்களுக்கு, போதுமான தூக்கம் ஒரு உண்மையான சவாலாகத் தான் இருக்கும்.

உலக தூக்கம் தினம் என்பது தூக்கப் பிரச்சினைகளை உள்ளவர்களை நினைவில் கொண்டு அவர்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள மக்கள் தூக்கத்தின், முக்கியதுவத்தை அறிந்து கொள்வதற்கான நாளாகும்.

வேர்ல்ட் ஸ்லீப் சொசைட்டி என்ற குழு 2008 ஆம் ஆண்டு இந்த நாளை அறிமுகப்படுத்தியது. மக்களிடையே உள்ள தூக்கம் மற்றும் தூக்கமின்மையை குறைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய

உலக தூக்க நாள் மார்ச்.19 அன்று அனுசரிக்கப்படுகிறது. தரமான தூக்கம், நல்ல மனம், மகிழ்ச்சியான உலகம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த ஆண்டு உறக்க தினம் கொண்டாடப்படுகிறது. தூக்கம் என்பது சிலருக்கு பிடித்தமான ஒன்று சிலருக்கு பிடிக்காத ஒன்று; இன்சோம்னியா என்று சொல்லக்கூடிய தூக்கமின்மை வியாதி உள்ளவர்களுக்கு தூக்கம் பிடிக்காத ஒன்று தானே?

இது மக்களிடையே உறக்கத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. மேலும், தீவிர தூக்க பிரச்சினை உள்ளவர்களுக்கும் இது உதவும்.

Also Read: சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா! உலக நாடுகள் அச்சம்!

உலக தூக்க தினம் என்பது, தூக்கம், தூக்க மருந்து, தூக்கம் பற்றிய கல்வி மற்றும் அன்றாடம் வாழ்வில் தூக்கமின்மை ஏற்படுத்தும் சமூக விளைவுகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது.

அமெரிக்க ஸ்லீப் அசோசியேசன் கூற்றின் படி 50 முதல் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சில வகையான தூக்க பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 25 மில்லியனுக்கும் அதிகமானோர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளது. மேலும், பொதுவாக எல்லோராலும் புகாரளிக்கப்படுகின்ற பிரச்சினை என்றால், அது தூக்கமின்மை (ஒரு முழு இரவு தூங்க இயலாமை) தான்.

தூக்கம் என்பது நாம் உயிர் வாழ்வதற்கு அவசியமான ஒன்றாகும். ஒரு மனிதன் அவன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்திலே கழிக்கின்றான். தொடர்ச்சியாக ஒரு மனிதன் 7 நாட்களுக்கு மேல் தூங்காமல் இருப்பதினால் அவனின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பைத்தியமாக மாறிவிடுவான் என்று ஆய்வு கூறுகிறது. ஒரு சாதாரண மனிதனுக்கு குறைந்தது 6 மணி நேரமாவது தூக்கம் தேவை. தூக்கமே நம் உடலில் உள்ள செல்களை புதுப்பிக்கக்கூடியது. நாள் முழுதும் வேலை செய்து களைத்து போய் உள்ள மூளையை ஒரு கட்டுகோப்புக்குள் கொண்டு வரும். ஆய்வுகள் இப்படி இருந்தாலும், வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கும் போது பல விஞ்ஞானிகள், சாதனையாளர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கி இருப்பார்கள்.

ஏன் இந்த நாள்?:

தூக்கத்தை பொறுத்தே ஒவ்வொரு நாளும் மனிதனின் வாழ்வு துவங்குகிறது. அப்படிப்பட்ட தூக்கத்தை நாம் சரியாக பயன் படுத்துகிறோமா? அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.

SLEEP

ஒன்றும் தேவையில்லை, நாம் அன்றாடம் பின்பற்றிய பழைய பழக்கவழக்கத்தை நாம் தினசரி வாழ்வில் பின்பற்றினாலே போதுமானது. “குழந்தையை போல தூங்க வேண்டும்”.

இவற்றை முற்றிலும் தவிர்த்தால் சீக்கிரம் தூங்கலாம்:

  • நாம் இரவில் சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்தாலே அந்த நாளிற்கான புத்துணர்ச்சி கிடைக்கும். மோட்டிவேசன் காணொளிகள் தேவையில்லை.
  • இரவு சிற்றுண்டி சீக்கிரம் எடுத்து கொள்வது நல்லது. அதைத் தான் சாப்பிட்ட உடன் தூங்கக் கூடாது என்று சொல்வார்கள்.
  • இரவில் வெளிச்சத்துடன் இருப்பதை தவிர்க்க வேண்டும். நாம் நீண்ட நேரம் மொபைல், லேப்டாப் போன்றவற்றை உபயோகிப்பதால் அதில் இருந்து வரும் நீல நிறக் கதிர்களால் நமது மூளை பகல் நேரம் என்று நினைத்து அதற்கு பழகிவிடுகிறது, அதனாலேயே நமக்கு இரவில் தூக்கம் வருவதில்லை. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவற்றை தவிர்த்து புத்தகங்களை வாசிப்பது சிறந்தது.
  • அதுமட்டுமல்ல பகலில் நாம் உண்ணும் உணவு தான், இரவில் நம் தூக்கத்தை நிர்ணயிக்கிறது.
  • தூங்கும் முன் நீர் ஆகாரத்தை குறைத்துக் கொள்வது நல்லது, ஏனென்றால் இரவில் சிறுநீர் கழிக்க நேரிடும், பிறகு தூங்குவது சிறிது கடினமாகிவிடும்.
  • உடற்பயிற்சி செய்வதன் மூலமும் நல்ல ஒரு தூக்கத்தைப் பெறலாம்.

குறைந்த பட்சம் ஒரே இடத்தில் உட்காருவதை தவிர்த்து உடல் அசைவுகளை ஏற்படுத்தி கொண்டு இருந்தாலே போதும்.

இதனை அறிந்து கடவுள் நமக்கு இரவு நேரத்தை ஒதுக்கியதே உறக்கத்திற்காக தான் என்பதை நாம் உணர்ந்து கவலைகள் மறந்து கைப்பிள்ளையை போல் உறங்குவோம்!

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special