“எவன்டா மேல.. எவன்டா கீழ.. எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு…!” பூஜ்ஜிய பாகுபாடு தினம் இன்று!

சேதிகேளு  Published on: 01 மார் 2022, 6:41 pm Edited on: 29 மார் 2022, 6:54 pm

என்னதான் அனைவரும் சமம் “ வேற்றுமையில் ஒற்றுமை” என்று கூறினாலும் இன்னும் உலகத்தில் பல்வேறு பாகுபாடு இன்னும் இருக்கத்தான் செய்கிறது. “மனுசங்க மார்டன் ஆகிட்டாங்க அவங்களோட எண்ணங்களும் மார்டன் ஆகிவிட்டது” என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு உள்ளோம்.

ஆனால் மாறினது வெறும் நம் உடை மட்டுமே, மனதில்லை. நாம் அனைவரும் மனிதர்கள் தான்! அனைவருக்கும் கீறினால் இரத்தம் வரும் தானே! அனைவரும் ஆண்டவன் படைப்பில் ஒன்று தான்! அந்த உண்மையை மனிதர்களாகிய நாம் ஏற்க மறுக்கிறோம்! கொஞ்சம் கூடுதல் பணமோ, பொருளோ, ஆடை, அணிகலன்களோ, அதிகமாகி விட்டால் நாம் தான் எல்லாம் என்ற கர்வத்தை இதயத்தில் பூட்டிக் கொள்கிறோம்!

ZeroDiscriminationDay

உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் உருவத்தை வைத்தோ, உடல் அளவுகளை வைத்தோ, நிறத்தை வைத்தோ, பலர் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகி கொண்டு தான் உள்ளனர். ஏன், இப்போதும் கூட சமூக வலைதளங்களில் அதிக கேலி பேச்சுகளுக்கு ஆளாகின்றனர். இப்படிப்பட்ட பேச்சுகளுக்கே சமூக வலைதளங்களில் முன்னுரிமை கிடைக்கிறது, பார்வையாளர்களை கவர;

சிறிது நாட்களுக்கு முன்பு கூட உருவக் கேள்விக்கு உள்ளான ஒருவர் “நான் உயிரோட இருக்கவே விரும்பல சாகனும் கயிறு கொடுங்க” என்று கேட்கும் அளவிற்கு, யோசிக்க வைத்தது கேலி விமர்சனங்கள் தான்.

மிக சாதரனமாக ஒருவரை நாம் செய்யும் கேலி, கிண்டல்கள் கூட ஒரு மனிதனை தவறான முடிவெடுக்க தூண்டும் அளவிற்கு மிகப் பெரிய விஷயம் என்று புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரின் உருவத்தை பார்த்து கேலி செய்வது, அவர்களின் செயலை பார்த்து கிண்டல் செய்வது, ஏன் காதுகளில் கேட்கக்கூடாத வார்த்தைகளே கேலி, கிண்டல்கள் தான். ஆனால், அந்த வார்த்தைக்குப் பின்னால் இருப்பது தான் பூதாகரமான அந்த சொல் “டிஸ்கிரிமினேஷன்” அதாவது “பாகுபாடு”, ”பாரபட்சம்”. ஆனால், இந்த பாகுபாட்டிற்கும், பாரபட்சத்திற்கும் உள்ளானவர்களுக்குத் தான் வலி தெரியும். மனிதர்களாகிய நாம் எப்போதும் இரண்டு சரியான விஷயங்களை, தவறாக செய்வதுண்டு! அவை;

1.தன்னிடம் உள்ளது மட்டுமே பெரியது என்று நினைப்பது.
2.தன்னிடம் உள்ளதை வைத்து மற்றவர்களை தரக் குறைவாக பேசுவது, எண்ணுவது.

ஆனால் இவ்வாறான பாகுபாடுகளைப் பார்த்து கேலி கிண்டலுக்கு ஆளான பலவித மனிதர்கள், அந்த கேலி, விமர்சனங்களை கடந்து சாதிப்பதும் உண்டு; அவற்றை நினைத்து தவறான முடிவை எடுப்பதும் உண்டு;

ZeroDiscriminationDay

சாதாரண மனிதர்களுக்குத் தான் இந்தவித பிரச்சனைகள் இருக்கும் என்பதல்ல; பெரிய ராஜ குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் இந்த மாதிரியான சூழ்நிலை நேர்ந்துள்ளது; இந்த உலகமே மதிக்கத் தக்க இங்கிலாந்து ராஜ வம்சத்தை கூட இந்த “டிஸ்கிரிமினேஷன்” விட்டு வைக்கவில்லை; மிகப்பெரிய அரசாட்சி நாடான இங்கிலாந்து நாட்டின் இளவரசர் “ஹாரி” வேற்று நிற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதால், பல்வேறு விமர்சனங்களுக்கும், மீடியாக்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை ஒரு நாடே அவரைப் பற்றி தவறான ஆதரவற்ற கருத்துக்களை எழுப்பியது; கடைசியில் அவர் ராஜ்யத்தை விட்டு வெளியேறி விட்டார்; அந்த அளவுக்கு இந்த பாகுபாடு மனிதர்களின் மனதில் ஆறாத ரணங்களை உருவாக்கி இருக்கிறது;

ZeroDiscriminationDay

நான் கண்ட உண்மைச் சம்பவம் ஒன்று! எனது பக்கத்து வீட்டில் ஒரு குழந்தை உண்டு; அந்த குழந்தை மிகவும் சுட்டி; வீட்டுக்குள் பூட்டி வைக்கவும் முடியாது; சிறிது வசதியான குடும்பம், தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் அந்த குழந்தையின் பொம்மைக்கு ஆசைப்பட்டு வருவர், அந்த குட்டிக்குழந்தை,  தான் வைத்திருக்கும் பொருட்களை அவர்களிடம் கொடுத்து விட்டு அதுவும் அவர்களுடன் சேர்ந்து விளையாடியது; அதைப் பார்த்த அந்த குழந்தையின் தாய் “அவர்களுடன் உனக்கென்ன சேர்க்கை என்று அடித்தார்” இவ்வாறு ஒன்றும் தெரியாத குழந்தைக்கு நாம் தான் பாகுபாட்டைக் கற்றுக் கொடுக்கிறோம்! அடுத்த முறை அந்த குழந்தை அவர்களின் பக்கம் திரும்பிப் பார்ப்பது கூட இல்லை, இனி அந்த குழந்தை தன் பெற்றோர்களைப் போல தான் வளரும். ஒரு மனிதனை குழந்தைப் பருவத்திலேயே பாகுபாடு அறிந்து நடப்பவனாக மாற்றி விட்டனர்.

இப்படிப்பட்ட பாகுபாடு, எந்த மாதிரியான மகிழ்ச்சியை கொடுத்து விடப் போகிறது; நம்மை விட மற்றவர்கள் எந்த விதத்தில் குறைந்தவர்கள் என்று யோசிக்க இயலாதவர்கள் தான் இப்படிப்பட்ட பாகுபாட்டை உருவாக்குகிறார்கள்.

ZeroDiscriminationDay

மற்றவர்களின் மனதை பற்றியோ, இழப்பை பற்றியோ யோசிப்பது கிடையாது; இதனால் நாம் கெட்டது மட்டுமின்றி, வரும் தலைமுறையினருக்கும் இதைத் தான் கற்றுக் கொடுக்கிறோம். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பண்புகளை விடவேண்டும்; எல்லா மனிதர்களிடமும் திறமையை தேடிப் பார்க்க வேண்டும். இந்த உலகத்தில் திறமை இல்லாதவர்கள் என்று ஒருவரும் இல்லை. அதே, நேரம் எல்லாத் திறமைகளையும் உடையவர் என்று ஒருவரும் இங்கில்லை. என்னதான் இனம், மொழி, மதம், ஜாதி, ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இருந்தாலும், மனிதன் என்ற ஒற்றுமை நமக்குள் இருக்கும் என்று எப்பொழுது நாம் உணர்கிறோமோ! அன்றைக்குத் தான் இந்த உலகம் இன்னொரு வார்த்தையையும் கற்றுக்கொள்ளும் அது தான் “பூஜ்ஜிய பாகுபாடு (zero discrimination)”

Also read: ஒல்லியா இருக்கிறவங்களுக்கு இந்த கவலையெல்லாம் சுத்தமா கிடையாது…

ZeroDiscriminationDay

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் பூஜ்ஜிய பாகுபாடு தினம் கொண்டாடப்படும் ; அதே போல் “தீங்கு விளைவிக்கும் சட்டங்களை அகற்றவும், அதிகாரமளிக்கும் சட்டங்களை உருவாக்கவும்(‘Remove Laws That Harm, Create Laws That Empower.’) என்ற தலைப்பில்  இந்த ஆண்டும் கொண்டாடப்பட உள்ளது. தேசிய ஐ.நா. விழிப்புணர்வு UNAIDS, இந்த நாளை மார்ச்.1, 2014 ல் அறிமுகப்படுத்தியது; இதன் முக்கிய நோக்கமாக, இந்த தினம் தீங்கு விளைவிக்கும் சட்டங்களை அகற்றவும், அதிகாரமளிக்கும் சட்டங்களை உருவாக்கவும், பெண்கள் மற்றும் சிறுமிகள் சந்திக்கும் அனைத்து வேறுபாடுகளிலும் எதிர்கொள்ளும் பாகுபாட்டை  சரி செய்யவும், மேலும் எய்ட்ஸ் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவரை புறக்கணிக்காமல் இருப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இனம், நிறம், உடலால் வேறுபட்டுள்ள மனிதர்களை புறக்கணிக்காமல் இருப்பதற்கும், பல நாடுகளில் உள்ள சட்டங்கள் மக்களை வித்தியாசமாக நடத்துகின்ற நிலைமை மாறவும், இது மாதிரியான இன்னும் பல மோசமான சட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்து, மனித சமுதாயத்தில் தொடர்கிற அனைத்து போராட்டங்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாகவும்  அறிமுகப்படுத்தப்பட்டது. பாலின சமத்துவமின்மை, அனைவரின் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் பாதிக்கிறது. பல நாடுகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டும் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதே சமயம் பெண்களின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்தும், தீங்கு மற்றும் சமத்துவமற்ற நடத்தைக்கு எதிராக அவர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் விதிமுறைக்கு வெகு தொலைவில் உள்ளன. இந்த பூஜ்ஜிய பாகுபாடு நாளில் பாரபட்சத்திற்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

ZeroDiscriminationDay

புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், ஆண்களுக்கு சமமாக பெண்கள் சமூகத்திலும், இல்லங்களிலும் பார்க்கப்படவும், வளர்க்கப்படவும் வேண்டும்; அதுமட்டுமின்றி, ஐக்கிய நாடுகள் சபை; வயது, பாலினம், தோல், உடை, நிறம், உயரம், எடை, தொழில், கல்வி போன்றவற்றை பொருட்படுத்தாமல் கண்ணியத்துடன் முழு வாழ்க்கையையும் வாழ்வதற்கான ஒருவரின் உரிமையை கொண்டாடும் நாளாக இந்த தினத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பூஜ்ஜிய குறைபாடு தினமான இன்று, மக்களை பாகுபடுத்தும் சமூகம் மற்றும் சட்டங்களுக்கு எதிராக நிற்போம் என்று உறுதிமொழி எடுப்போம்!

“எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை”; “எல்லோரின் வாழ்க்கையும் ஒன்று போல் இருப்பதுமில்லை; இதனையறிந்து, பிறரிடம் அன்பை பகிர்ந்து, மற்றவர்களை புகழவில்லை என்றாலும், இகழாமல் வாழ்ந்து விட்டுப் போவது சிறந்தது!. பாகுபாடற்ற உலகை உருவாக்குவோம் வாருங்கள்!

உங்கள் கருத்து

Your email address will not be published.

ட்ரெண்டிங் நியூஸ்

News TN Special

News TN Special